தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. 329 பேர் தீக்காயம் அடைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் கூறியதாவது:-
“தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 164 தீ விபத்துகள் ராக்கெட் பட்டாசுகளால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக சென்னையில் 28 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு இடத்தில்கூட தீ விபத்து ஏற்படவில்லை.
காஞ்சிபுரம்-2, திருவள்ளூர்-1, திருவண்ணாமலை-2, நாகப்பட்டினம்-8, புதுக்கோட்டை-8, கடலூர்-12, கோவை-4, திருப்பூர்-4, ஈரோடு-5, சேலம்-1, திண்டுக்கல்-4, நாமக்கல்-2, மதுரை-18, தேனி-2, ராமநாதபுரம்-4, சிவகங்கை-8, விருதுநகர்-10, தூத்துக்குடி-1, திருநெல்வேலி-17, கன்னியாகுமரி-6, கரூர்-10, தஞ்சாவூர்-12, திருவாரூர்-21 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது 836 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீ விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
தீ விபத்துகள் ராக்கெட் பட்டாசுகளால் தான் ஏற்படுகிறது அதை மக்கள் கவவனகுறைவாக எடுத்துகொள்கின்றனர்.
தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனி வார்டு உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் அடைந்ததாக 329 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 17 பேர் லேசான காயத்துடன் வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றனர். 9 பேர் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டீன் வசந்தாமணி கூறும்போது, “பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்து 26 பேர் சிகிச்சை பெற்றனர்.
இதில் 9 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 42 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்” என்றார்.