கோவை : கோவை, தபால் நிலைய முன்னாள் உதவி அதிகாரி ஈரோடு மாவட்டம் பாசூர், சிவகரி ஆகிய தபால் நிலையங்களில், உதவி தபால் அதிகாரியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் சரவணன் (39), இவர் வாடிக்கையாளர்கள் 2 பேரிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு, அவர்களது அஞ்சலக புத்தகத்தில் பதிவு செய்துகொடுத்துவிட்டு, அதை தபால் நிலைய அலுவலக கணக்கில் பதிவு செய்யாமல் முறைகேடு செய்துள்ளார். இதுதொடர்பாக அறிந்த உயர் அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு சி.பி.ஐ.யில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மொத்தம் ரூ.6.60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. 3 ஆண்டு சிறை இதையடுத்து அவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக நேற்று சரவணன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பளித்தார்.