காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். புருஷோத்தமனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் கடைக்கு செல்ல முடியவில்லை. அதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு கணக்கு பார்க்க தனியார் நிறுவன ஊழியரான அவரது சகோதரர் குமாரசாமி (53), சென்றார். கணக்கு பார்த்த குமாரசாமி டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் பாபு (36), விஜயகுமார் (42), ஆகியோருடன் கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். சிறிது தூரம் சென்றதும் மர்ம நபர்கள் 3 பேர் மோட்டர் சைக்கிளில், வந்து அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.
இதில் பயந்து போன பாபு, விஜயகுமார் இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்றனர். மர்ம நபர்கள் குமாரசாமியின் கை, முதுகு, மார்பு போன்ற பகுதிகளில், கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். அவர்கள் சென்றவுடன் அங்கு வந்த பாபு, விஜயகுமார் ஆகியோர் உயிருக்கு போராடிய குமாரசாமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் கடையில் மது விற்ற பணத்தை கடையிலேயே வைத்து விட்டு வந்ததால் பணம் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்