சென்னை : சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு பகுதியில், பிரபலமான தனியார் கிரானைட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை, 1971-ம் ஆண்டு தென்சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் வைத்து கிரயம் பெறப்பட்டது. இந்த நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை என்பவர் கிரயம் பெற்றது போல் போலி ஆவணம் தயாரித்து அந்த ஆவணம் மதுராந்தகத்தில் ஆட்டோவில் செல்லும்போது தொலைந்து விட்டதாக கூறி, மதுராந்தகம் காவல்நிலையத்தில், புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர். அதை வைத்து திருப்போரூர் சார்பதிவகத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காசி (60), மூலமாக போலி ஆவணங்களை தயாரித்து சார்பதிவாளர் அலுவலகம் கொடுத்தது போன்று உண்மையான நகல் ஆவணம் பெற்றுள்ளனர்.
அந்த ஆவணத்தை வைத்து, கடந்த 2020-ம் ஆண்டு மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை தனது மகன் ரஞ்சித்குமாருக்கு குடும்ப தான செட்டில்மெண்ட் கொடுப்பது போல் ஆவணம் தயார் செய்துள்ளார். இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு சார்பதிவாளர் செல்வசுந்தரி லஞ்சம் பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். பின்னர் அந்த இடத்தை அபகரிக்க முயற்சித்தபோது, உண்மையான உரிமையாளரான கிரானைட் நிறுவனத்தின் அதிபர் இதுபற்றி தாம்பரம்காவல் ஆணையரிடம், புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக தாம்பரம் காவல் ஆணையர் திரு. ரவி, உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 13-ந் தேதி தனிப்படைகாவல் துறையினர், தற்காலிக ஊழியர் காசி, அவரது மருமகன் பிரபாகரன், போலி ஆவணம் எழுதி கொடுத்த ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில், ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சார்பதிவாளர் செல்வசுந்தரியை நேற்று சென்னை வலசரவாக்கம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து தனிப்படை காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் இது தொடர்பாககாவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.