சென்னை : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமு, (45), ஸ்ரீபெரும்புதுாரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ், (20), கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில தினங்களுக்கு முன், தினேஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையை தொடராமல் வீட்டிற்கு திரும்பி விட்டார். கஞ்சா மற்றும் மதுவுக்கு பணம் கேட்டு, பெற்றோரிடம் அடிக்கடி தினேஷ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில், துாங்கி கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின் தினேஷ் தலைமறைவானார். ஸ்ரீபெரும்புதுார் காவல் துறையினர், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் பதுங்கி இருந்த தினேஷை, காவல் துறையினர், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். செலவுக்கு பணம் தராமல் திட்டியதாலும், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாலும் தந்தையை கொலை செய்ததாக, தினேஷ்காவல் துறையிடம், வாக்குமூலம் அளித்துள்ளார்