சென்னை: சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது.
ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினருக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து இரவோடு இரவாக உத்தரவு பறந்தது. அனைத்து எஸ்.பி.க்களும் உடனடியாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.மேலும், ‘ரெட் அலெர்ட்’ எனப்படும் உஷார் நிலையும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சென்னை மாநகர் முழுவதும் இரவோடு இரவாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முக்கிய இடங்களிலும் அதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அனைத்து பிரிவு காவலர்களும் பணிக்கு வரவேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதாகவும், மாநில அரசுக்கு உதவ போதுமான மத்திய படைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசு எந்த உதவி கேட்டாலும், அதை அளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், தேவைப்படும்போது, அவர்கள் தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.