தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 32), சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகம் ஒன்றில் தபால்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் கிரெடிட் கார்டில் அக்கவுண்ட் தொகையை அதிகரித்து தருவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். கணக்கு விவரங்களை கூறியபோது உங்கள் செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும். அந்த எண் வந்தவுடன் தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அவ்வாறு ஓ.டி.பி. எண் வந்தவுடன் ஞானசேகரன் கூறியவுடன், அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுந்தகவல் வந்தது. இதைபார்த்து ஞானசேகரன், அந்த நபர், நூதன முறையில் பணம் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.