கோவை : கோவை, துடியலுாரை சேர்ந்தவர் ஆனந்தி ( 51), இவரது மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.டி., தளத்தில் சமீபத்தில் வெளிவந்த சினிமா பார்க்க சலுகை கட்டணம் வழங்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பி அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு, கிரிடிட் கார்டு எண், ரகசிய எண்களை தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில் 1.50 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக, குறுஞ்செய்தி வந்துள்ளது. இதேபோல கடந்த, 8-ம்தேதி பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஏ.டி.எம்., கார்டை தொலைந்து விட்டார். கார்டை முடக்கம் செய்ய போலியான வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
ஏ.டி.எம்., கார்டின் விவரங்களை பெற்றுக் கொண்டு ரூ. 8 லட்சத்து 76 ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் 4 நட்சத்திர ஓட்டலில் வருடம் முழுவதும் தங்குவதற்கு குறைந்த விலையில் கட்டணம் என்ற விளம்பரத்தை நம்பி சூலுாரை, சேர்ந்த வெங்கட்குமார் ( 27) , என்பவர் ரூ.2.30 லட்சம் கட்டியுள்ளார். அது போலியான விளம்பரம் என தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரும் கோவை மாவட்ட பைசர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து, இவர்கள் இழந்த ரூ 12.50 லட்சத் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.