சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு , வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு. உதய் பாஸ்கருக்கு, தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து, சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த, சென்னை மண்ணடியை சேர்ந்த தமீம் அன்சாரி (32), சென்னை முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் சஜிதா யாஸ்மீன் (28), ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த மணிபர்சை, சோதனை செய்தபோது, அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும், ரூ.72 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 596 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரையும், சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில், உள்ள குப்பை தொட்டியில் கேட்பாரற்று, கிடந்த மர்ம பாலித்தீன் பையை மத்திய தொழிற்படை, காவல் துறையினர், கண்டெடுத்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.97 லட்சத்து 57 ஆயிரம், மதிப்புள்ள 2 கிலோ 120 கிராம், தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 70 லட்சத்து 2 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 716 கிராம் தங்கத்தை, சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.