சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்த நவரோஜினி, பெ/வ.75 என்ற மூதாட்டி கடந்த 22.7.2019 அன்று காலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியே ஷேர் ஆட்டோவில் வந்த 3 பெண்கள் “வாருங்கள் செல்லும் வழியில் இறக்கிவிடுகிறோம்” எனக் கூறி நவரோஜினியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சென்றனர். வழியில் அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை திருடிக் கொண்டு இறங்கியதை அறிந்த நவரோஜினி இது குறித்து H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 1.மரியா, 2.ஜோதி, 3.பஞ்சவர்ணம், ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), பிரவீன்குமார் (த.கா.26689) மற்றும் முதல்நிலைக் காவலர் சரவணன் (மு.நி.கா.36105), ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (20.9.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.