சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு (Crime Against Women & Children) கடந்த 03.6.2019 அன்று தொடங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், சென்னை பெருநகர காவலின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு அதிகாரியாக துணை ஆணையாளர் திருமதி.எச்.ஜெயலஷ்மி அவர்கள் நியமிக்கப்பட்டு, சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இப்பிரிவுடன் சென்னை பெருநகர காவல்துறையின் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகார்களுக்கு இப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 26.8.2019 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு வழங்கிய 40 அம்மா ரோந்து வாகனங்களும், இப்பிரிவிற்கும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அனுராதா அவர்கள் 30.8.2019 அன்று படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு தொடர்ந்து பள்ளியில் படிக்க உதவி செய்தும், 12.9.2019 அன்று சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தும், 17.9.2019 அன்று சுலோச்சனா என்ற 75 வயது மூதாட்டியை மருத்துவ உதவிகள் புரிந்து அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைத்தார். W-15 இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.தனம்மாள் என்பவர் 13.9.2019 அன்று ஆதரவில்லாத 12 வயது சிறுமியை பெண்கள் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்து உதவியும், 15.9.2019 அன்று புகார் அளித்த தம்பதியருக்கு ஆலோசனைகள் வழங்கியும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மீட்டு அன்பகத்தில் சேர்த்தும் உதவிபுரிந்துள்ளார்.
W-5 வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தாரணி என்பவர் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தா முடியாத வசதி குறைந்த 16 மாணவிகளை காலாண்டு தேர்வு எழுத அனுமதிக்காதது குறித்து கிடைத்த புகாரின்பேரில், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று தந்தார்.
சென்னை பெருநகர காவலின் சிறார் உதவி புரியும் காவல் பிரிவின் (JAPU) ஆய்வாளர் திருமதி.கஜலஷ்மி என்பவர் அம்மா ரோந்து வாகனம் மூலம் சிறப்பாக கண்காணித்து வந்து, கொண்டித்தோப்பு மற்றும் வால்டாக்ஸ் சாலையில் கொத்தடிமைகளாக இருந்த 60 சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து, பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
திருமதி.அனுராதா, W-16 புளியந்தோப்பு அ.ம.கா.நி., திருமதி.C.தனம்மாள், W-15 இராயபுரம் அ.ம.கா.நி., திருமதி.தாரணி, W-5 வேப்பேரி அ.ம.கா.நி., மற்றும் திருமதி. J.கஜலஷ்மி, JAPU (2), புனித தோமையர்மலை ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (20.9.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.