சென்னை: வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், வ/22 என்பவர், புழல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று 19.08.2019 இரவு 11.45 மணியளவில் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாடி, 200 அடி சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
அவ்வழியாக TN-18-AU-3744 Bajaj Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி மனோஜிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். மனோஜ் அவசர அழைப்பு எண் 100ல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதனை கொரட்டூர் இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் மேற்படி மனோஜிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிவந்தது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து T-3 கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிரஞ்சீவி வ/19, த/பெ.கந்தசாமி, காவாங்கரை, சென்னை என்பதும் மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு பணியின் போது மேற்படி செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய குற்றவாளிகளை கைது செய்த கொரட்டூர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கே.பலராமன் (HC 35470) திரு.ஐ.சீதாராமன் (HC 36593) மற்றும் எஸ்.முருகன் (Gr.I.PC.27262) ஆகிய மூன்று காவல் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் உயர்திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (20.8.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.