சென்னை: சென்னையில், நட்சத்திர ஒட்டலில் உள்ள மதுபான பாரில் வயது குறைவு காரணமாக அனுமதிக்கப்படாட இளைஞர் ஒருவர், ஆத்திரத்தில் ஓட்டலின் இரும்பு கேட்டை காரால் மோதி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலுக்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞரின் வயது குறித்து அறிந்த ஊழியர், அந்த இளைஞருக்கு வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதிக்க முடியாது என கூறி அந்த இளைஞரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பார் உரிமையாளரிடம் தகராறில் ஈட்பட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த இளைஞர், தனது காரை எடுத்து வந்து அதிவேகத்தில் ஓட்டலின் இரும்பு கேட்டின் மீது மோதினார். இதில் அவரது காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்ததோடு, அந்த இரும்பு கேட் அவரது காரில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த இளைஞரால் அங்கிருந்து தப்பிச்செல்ல முயவில்லை. மேலும் இரும்பு கேட் மாட்டிக்கொண்ட கார் நடு ரோட்டில் நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீனம்பாக்கம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த காரை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். மேலும் இரும்பு கேட்டின் மீது கார் மோதியதில் காயமடைந்த இளைஞரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த இளைஞர் வந்திருந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், அந்த இளைஞரின் குடும்பத்தினர் காவல்துறையின் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.