சென்னை: சென்னையில் நடந்த காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் 6 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் முதல் முறையாக உயர் காவல் அதிகாரிகளுக்கிடையே துப்பாக்கி சுடும் திறனை அதிகரிக்க போட்டிகள் நடத்த முடிவுகள் செய்யப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் முதல் டிஐஜிக்கள் வரையில் ஒரு பிரிவாகவும், ஐஜிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியை கமாண்டோ படை அதிகாரிகள் நடத்தினர்கள்
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டியில் 30 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் இறுதிப் போட்டி சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது. அதில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் முதல் டிஐஜிக்கள் ஒரு பிரிவாகவும், ஐஜிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் மொத்தம் 10 மீட்டர், 15 மீட்டர், 20 மீட்டர், 25 மீட்டர் தூரம் கொண்ட 4 ரவுண்டுகள் சுட வேண்டும். ஒவ்வொரு ரவுண்டிலும் 5 முறை சுட வேண்டும். மொத்தம் 20 முறை சுட வேண்டும்.
அதில் ஐஜிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை உள்ள அதிகாரிகளுக்கான போட்டியில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரு.விஜயகுமார் முதல் இடத்தையும், திருச்சி காவல் ஆணையர் திரு.அருண் 2வது இடத்தையும், ரயில்வே ஏடிஜிபி திரு.சைலேந்திரபாபு 3வது இடத்தையும் பெற்றனர். கூடுதல் கண்காணிப்பாளர்கள் முதல் டிஐஜிக்கள் வரை உள்ளவர்களுக்கான போட்டியில், முதல் இடத்தை சேலம் டிஐஜி திரு.செந்தில்குமாரும், 2வது இடத்தை கமாண்டன்ட் திரு.பால்ராஜூம், 3வது இடத்தை வடசென்னை இணை ஆணையர் திரு.சுதாகரும் பெற்றனர்.
அதைத் தொடர்ந்து இந்த 6 அதிகாரிகளுக்கும் டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து 2 பிரிவிலும் வெற்றி பெற்ற 6 அதிகாரிகளுக்குள் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் இடத்தை ஏடிஜிபி திரு.சைலேந்திரபாபுவும், 2வது இடத்தை திரு.பால்ராஜூம், 3வது இடத்தை திரு.விஜயகுமாரும் பெற்றனர்.
இவர்களுக்கும் டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் பதக்கங்களை வழங்கினார். இந்த விழாவில் டிஜிபி திரு.ஜாங்கிட், ஏடிஜிபிக்கள் திரு.தமிழ்செல்வன், திரு.ஆசிஷ் பேங்கரா, ஐஜி திரு.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது
சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்