திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). இவர் சமயபுரம் ஈச்சம்பட்டி பகுதியில் சூதாட்ட கிளப் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் வீட்டில் இருந்து காரில் சென்ற அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது குறித்த போலீஸ் விசாரணையில் காட்டூர் பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி கார்த்தி, கார் டிரைவர்கள் பாஸ்கர், பிரகாஷ், மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஹரி ஆகியோர் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் அளித்த வாக்குமூலம்; சோமசுந்தரம் தினமும் பல லட்சம் பணத்துடன் சமயபுரம் சென்று சூதாடுபவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொண்டு வருவார். காட்டூர் கார்த்தி இதுபோல் அவரிடம் வட்டிக்கு வாங்கி பணத்தை இழந்திருக்கிறார். அந்த பணத்தை திரும்ப கேட்டு கார்த்தி அவரிடம் தகராறு செய்தும் அவர் தரவில்லை.
இவ்வாறு பணம் இழந்தவர்கள் பலமுறை சோமசுந்தரத்தை மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆனால் அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை.
கொலை செய்யப்படுவதற்கு சிலநாட்களுக்கு முன் கார்த்தியும், கண்ணனும் சேர்ந்து சோமசுந்தரத்திடம் 1 லட்சம் பணம் பறித்தோம். இது குறித்தும் அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் சம்பவத்தன்றும் அவர் பணம் கொண்டு வருவார் என்று அவரை கடத்தி பணம் கேட்டு தாக்கியதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை இன்ஸ்பெக்டர் உமாசங்கர், மற்றும் போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி