கடலூர்: நாடு முழுவதும் நாளை(திங்கட்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் போது தீவிரவாதிகள், நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால், நாடு முழுவதும், உஷார் படுத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர முக்கிய சாலைகளில், காவல்துறையினர் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர காவல்படையினரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. திரு.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடலூர் கடலோர காவல்படை ஆய்வாளர் திரு.சேகர் தலைமையில், உதவி- அய்வாளர்கள் சிவகுருநாதன், பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் நேற்று நவீன ரோந்து படகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் கிள்ளை வரை உள்ள 70 மீனவ கிராம பகுதிகளில் கடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களிடம், சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தால், உடனே கடலோர காவல்படை இலவச தொலைபேசி எண் 1093–க்கு தகவல் தெரிவிக்குமாறு கடலோர காவல்படையினர் கேட்டுக்கொண்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த கப்பல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.