கடலூர்: சிதம்பரம் மேட்டுத்தெரு வடக்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த, டாஸ்மாக் கடை தற்காலிக உதவியாளரான கார்த்திக்(30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையறிந்த சுரேஷ் தனது மனைவி லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் சுரேசிடம் தகராறு செய்த லட்சுமி அவரை விட்டு பிரிந்து கார்த்திக்குடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். இதனால் கார்த்திக் மீது சுரேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்பிரச்சினையில் சுரேசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம் (40), அவரது நண்பரான பள்ளிப்படையை சேர்ந்த மின் ஊழியர் தண்டபாணி ஆகியோர் பேசி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் வண்டிக்கேட் அருகே செல்வம், தண்டபாணி ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த கார்த்திக் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் செல்வம், தண்டபாணி ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த செல்வம், தண்டபாணி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வம் இறந்தார். தண்டபாணி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கிளளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக் அவருடைய அண்ணன் கதிர்வேல், கந்தமங்கலம் கோவிலாம்பூண்டியை சேர்ந்த ஜெயசந்திரராஜன் (26), உத்தமசோழமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் (30), வடக்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்த இளங்கோவன் (57), சிதம்பரம் கஸ்பா தெருவை சேர்ந்த சந்துரு (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் செல்வத்தை கொலை செய்ய பயன்படுத்திய கார், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து முக்கிய குற்றவாளியான கார்த்திக் காவல்துறையினரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில்
‘எனக்கும், சுரேசின் மனைவி லட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை தட்டிக்கேட்டதால், சுரேசிடம் இருந்து லட்சுமி பிரிந்து வந்து என்னுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எனது அறிவுரைப்படி லட்சுமி, சுரேசிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டார். அதற்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சுரேசுக்கு ஆதரவாக செல்வம், தண்டபாணி ஆகியோர் என்னிடம் வந்து பேசினர். அப்போது அவர்கள் சுரேசிடம் ஜீவனாம்சம் கேட்குமாறு லட்சுமியை தூண்வடி விட்டாயா? என்று என்னை தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த நான் அவர்களை கொலை செய்ய முடிவு செய்து எனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செல்வத்தையும், தண்டபாணியையும் இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் செல்வம் இறந்து விட்டார்.‘
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.
இதனிடையே செல்வத்தின் ஆதரவாளர்கள், கார்த்திக்கின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.