சென்னை : சென்னை, முகலிவாக்கம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், (33), ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி வினோதினி, (30), இவர்களுக்கு சோனியா, 5, என்ற மகளும், மோனிஷ், 3, என்ற மகனும் உள்ளனர். இவர், சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின் வீடு திரும்பிய வினோதினிக்கு, கடும் வயிற்று வலியும், வயிறு வீக்கமாகவும் இருந்தது. இதனால் கடும் அவதிப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில், ஆலோசனை பெற்றபோது, வயிற்று பகுதியில், பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார். அரசு மருத்துவர்களின் கவனக் குறைவாலும், தவறான சிகிச்சையாலும் தான் வினோதினி இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் நேற்று இரவு வரை மருத்துவமனையை , முற்றுகையிட்டனர். அவர்களிடம், மருத்துவர்கள், காவல் துறையினரிடம், பேச்சு நடத்தினர்.