தர்மபுரி : தர்மபுரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை, விற்பனைக்காக சிலர் வெளிமாநிலங்களுக்கு, வாகனங்கள் மூலம் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை காவல் சூப்பிரண்டு திரு. விஜயகுமார், உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திரு. விவேகானந்தன், தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில் முருகன், ராமச்சந்திரன், காவலர் செந்தில்குமார், வேணுகோபால், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். குண்டல்பட்டி பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 22, மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை விற்பனைக்காக, கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல் துறையினர், பறிமுதல் செய்து தர்மபுரி நுகர்பொருள், வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தலில், ஈடுபட்ட தர்மபுரி குள்ளனூர் பகுதியை சேர்ந்த காதர் (38), என்பவரை காவல் துறையினர், கைது செய்தனர். அவருக்கு ரேஷன் அரிசி எப்படி கிடைத்தது? ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கே கடத்தி செல்லப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.