கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் தொடர் விடுமுறை எடுக்காமல் இரவு-பகல் பாராமல் காவல் துறை பணியில் பம்பரமாக சுழன்று வருபவர், அர்ச்சனா ஜா. இவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். அர்ச்சனா நிறைமாத கர்ப்பமாக இருந்த சமயத்தில், ராய்ப்பூர் அருகே உள்ள பிலாஸ்பூர் பகுதிக்கு அம்மாநில முதல்வர் வந்தபோது தொடர்ச்சி யாக 7 நாட்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். குழந்தையை பெற்றெடுத்த பின்பு, தன்னுடைய பச்சிளம் குழந்தையுடன் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு கையில் வாக்கி டாக்கியுடனும், மறு கையில் பச்சிளம் குழந்தையுடனும் அவர் காட்சியளித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த சமயத்தில் அவருடைய கணவர் பணி நிமித்தமாக பிலாஸ்பூரில் தங்கி இருந்தார். “வாரத்தில் இரண்டு நாட்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளதாலும், குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததாலும் ரோந்துப் பணியில் குழந்தையுடன் ஈடுபட்டேன்”என்று அவர் அப்போது விளக்கமளித்தார்.
சில மாதங்கள் மட்டுமே கர்ப்பகால விடுமுறை எடுத்துவிட்டு பணிக்கு திரும்பிய அர்ச்சனா குழந்தை வளர்ப்பையும், காவல் பணியையும் கண்ணுங்கருத்துமாக கவனித்து வருகிறார். ‘‘காவல்துறை பணி சவாலானது. அதே நேரத்தில் நான் பெண்ணாக இருப்பதால், கர்ப்ப காலத்தையும், குழந்தை வளர்ப்பையும் காரணம்காட்டி என் வேலையை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. குழந்தையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும், அதே சமயத்தில் குடும்ப பொறுப்பையும், வேலையில் எனக்கான கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
குழந்தை பிறந்த சமயத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த கடினமான காலங்களில், என் மாமியார் மற்றும் கணவர் எனக்கு மிகுந்த ஆதரவளித்தனர். அதன் காரணமாக என் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற முடிகிறது’’ என்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நடந்த ஒரு கடத்தல் சம்பவத்தில் அர்ச்சனா தனது குழுவுடன் துப்பு துலக்கி 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்துவிட்டார். இந்த செயல் அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
விடாமுயற்சி, அர்ப் பணிப்பு காரணமாக, அர்ச்சனா தனது துறையிலுள்ள மற்ற பெண் அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். ‘‘பெண்கள் தங்கள் உரிமைகளை கோருவதற்குப் பதிலாக, தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கவேண்டும். அதுவே பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும்’’ என்கிறார், அர்ச்சனா.