தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் எஸ்ஐக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என்று பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் பட்டியல் உள்ளதாக தெரிகிறது. இது ஒருபுறம் என்றால் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும். அதேபோல் ஏடிஎம் எண் கேட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே காலமாற்றத்திற்கேற்ப குற்றம் செய்பவர்களை விட அதனை தடுக்க வேண்டிய காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உதவி-ஆய்வாளரை தேர்வு செய்து கடந்த ஒரு வாரம் சைபர் கிரைம் தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் குற்றவாளிகளை பிடித்து அடித்து, உதைத்து வழக்குப்பதிவு செய்வதோடு விடாமல், குற்றவாளிகள் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர்?, குற்றவாளிகள் பட்டியலை எப்படி திரட்டுவது?, குற்றவாளிகளை புதிய யுக்தியில் எப்படி கண்காணிப்பது? போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து விரைவில் 32 மாவட்டங்களிலும் டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.