மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார்.
5 பேரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர், மனோகர் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டில் மூவரை தவிர அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாயும் இருந்துள்ளது. வீட்டை பூட்டிவிட்டு காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். முதலில் காவல்துறையினர் வளர்த்தவர்களை அழைத்துச் செல்வதை பார்த்து நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது.
பின்னர் போலீசார் அந்த நாயை கட்டுப்படுத்தினர். மனோகர் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களிடம் இந்த நாயை பார்த்துக் கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு அனைவரும் மறுத்துள்ளனர். எனவே, இந்த பிராணியை பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் போனால் பசியில் இறந்துவிடும் என்பதால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பணி நேரம் போக மற்ற நேரத்தில் நாயை குளிப்பாட்டுவது, உணவு வழங்குவது என அன்பாக நடந்துக் கொள்வதாக கூறுகின்றனர். மேலும் அந்த நாய் இப்போது காவலர்களிடம் அன்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
காவலர்களின் கடினமான அலுவல் பணிகளுக்கிடையே ஒரு நாய் மீதான காவலர்களின் இந்த கனிவான பார்வை, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.