சென்னை: காவல் சிறார் மன்றம்சென்னையில் நடந்த குற்றச்சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ததில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்ற சம்பவங்களில் அதிகளவிலான சிறுவர், சிறுமிகள் ஈடுபடுவது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணமாக சிறுவர் சிறுமிகளை நல்வழிப்படுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், காவல் சிறார் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. தமிழக காவல்துறையில் முதல் முறையாக நாகர்கோவிலில் 07.03.1959 முதல் காவல் சிறார் மன்றம் துவக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு சென்னை அசோக் நகரிலும், 1976ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை மற்றும் 1978ம் ஆண்டு சென்னை காசிமேட்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் காவல் சிறார் மன்றங்கள் அரசு உத்தரவுபடி உருவாக்கப்பட்டன.
காவல் சிறார் மன்றங்களின் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம்ஒவ்வொரு காவல் சிறார் மன்றங்களுக்கு ஒரு சாரண ஆசிரியர் மற்றும் ஒரு பராமரிப்பாளர் ஆகியோர் காவல்நிலைய பொறுப்பு அலுவலர் மூலம் நிர்வாகம் செய்து வருகின்றனர். மேற்கண்ட சாரண ஆசிரியர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அரசு மூலம் கௌரவ ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நிதி உதவிகள் பெற்று காவல் சிறார் மன்றங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள், கணிணி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. சிறார் மன்றங்களில் உறுப்பினராக உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டு பயிற்சிகள், மாலைநேர வகுப்புகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு அளித்து ஊக்கப்படுத்துதல் மற்றும் பொது அறிவுத்திறனை வளர்க்க நூலகம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திரு.சங்கர் ஜுவால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றவுடன், சென்னை பெருநகரில் செயல்பட்டு வரும் அனைத்து காவல் சிறார் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க, காவல் இணை ஆணையாளர், மேற்கு மண்டலம் அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த 03.08.2021 அன்று உத்தரவு பிறப்பித்தார்.மேற்கண்ட உத்தரவின்படி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் ஆகியோருடன் காவல் சிறார் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையரகங்கள் நீங்கலாக, சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 74 காவல் சிறார் மன்றங்கள் இயங்கி வந்தது.
மேலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய சிறுவர் மற்றும் சிறுமியர் தவறான வழியிலும் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க சென்னையில் கூடுதலாக காவல் சிறுவர் சிறுமியர் மன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் 38 காவல் சிறார் மன்றங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையகர காவல் நிலைய எல்லைக்குள் உருவாக்க 17.11.2021 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது மொத்தம் 112 காவல் சிறார் மன்றங்கள் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் 3,613 சிறுவர்களும் மற்றும் 1804 சிறுமிகளும் உறுப்பினராக உள்ளனர். இச்சிறார் மன்றங்களை கவனிக்க 106 சாரணர் ஆசிரியர்கள் மற்றும் 104 பராமரிப்பாளர்கள் உள்ளனர்.
மேற்கண்ட காவல் சிறார் மன்றங்களின் உள்ள சிறுவர் சிறுமிகளின் திறனை மேம்படுத்தவும், விளையாட்டுத்துறையில் அவர்களை ஊக்குவிக்கவும் தேவையான உபகரணங்கள் பெறுவதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் நிதியுதவி கோரப்பட்டது. அதன் பலனாக 1. செயின்ட் கோபின் 2. பாலமந்திர் டிரஸ்ட் 3 . பூமிகா டிரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி அளித்து 8 சிறார் மன்றங்களை நிர்வகிக்க சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே HCL நிறுவனம் 24 காவல் சிறார் மன்றங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய நீதி அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் 05.03.2022 அன்று மாநில மனித உரிமை ஆணைய கருத்தரங்கரத்தில் காவல் சிறார் மன்றங்களைச் சார்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக நடத்தப்பட்டது.மேலும் அனைத்து காவல் சிறார் மன்றங்களில் தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கணினி பயிற்சி பெற சிறார் மன்றங்களுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது . மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி மற்றும் மாலை நேர கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயிற்சி முடிந்தபின் மன்ற உறுப்பினர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட சிறார் மன்றங்களில் பயிற்சி பெற்ற வீரகுமார் என்ற மாணவர் தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளராக தேர்வு பெற்று தற்போது பயிற்சியில் இருந்து வருகிறார். இதுபோன்று பல்வேறு சிறவர் சிறுமிகள் சிறார் மன்றங்கள் மூலம் திறன் பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இதர சிறுவர் சிறுமிகளை மேற்கண்ட சிறார் மன்றங்களில் இணைத்து பல்வேறு பயிற்சிகள் அளித்து, ஊக்குவித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.