சென்னை: கிண்டி பகுதியில் 2015ம் ஆண்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும், மாமனார் மற்றும் மாமியாருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை, மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த செல்லியம்மாள், (வ/23 (2015)), என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2015 ஆண்டு கணவருடன் கோபித்துக் கொண்டு, வேளச்சேரி, காமராஜபுரம், கங்கை அம்மன் கோயில் தெருவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மேற்படி வீட்டிற்கு கடந்த 04.05.2015 அன்று காலை வந்த அவரது கணவர் மதன்குமார் என்பவர் மேற்படி வீட்டில் இருக்கும் போது, செல்லியம்மாள் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இறந்து போன செல்லியம்மாளின் தாயார் சாந்தி என்பவர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து, தற்கொலைக்கு துண்டுதலாக இருந்த செல்லியம்மாளின் கணவர் மதன்குமார், (வ/25 (2015 ஆண்டு), மதுரவாயில் என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையை, சென்னை, அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடித்து இன்று (16.03.2022) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்லியம்மாளின் கணவர் 1) மதன்குமார் (வ/32) மதுரவாயில் என்பவருக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15,000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
என்றும், செல்லியம்மாளின் மாமனார் 2) சடகோபன் (வ/65) என்பவருக்கும், செல்லியம்மாளின் மாமியார் 3) செந்தாமரை (வ/45) ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கனம் அல்லிகுளம் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.