சென்னை: தரமணி, கொடுங்கையூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 6 நபர்கள் தரமணி, கொடுங்கையூர் மற்றும் மதுரவாயல் காவல் குழுவினர்களால் கைது. 13.2 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். Taramani, Kodungaiyur and Madhuravoyal Police teams arrested 6 persons for possession of Ganja. 13.2 kgs Ganja, auto and two wheeler were seized. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (25.03.2022) காலை சுமார் 10.00 மணியளவில் தரமணி, கனகம் சாலை, பிள்ளையார் கோயில் ரேஷன் கடை அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 1) ரட்டன் டெபர்மா (வ/40) திரிபுரா மாநிலம், 2) சமீர் டெபர்மா (வ/27) திரிபுரா 3) அனர் உசைன் (வ/30) திரிபுரா ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (25.03.2022) காலை சுமார் 07.30 மணியளவில் கொடுங்கையூர், M.R நகர் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் அமர்ந்திருந்த 2 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் ஆட்டோவில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 1) யஷ்வந்த் பாபு (எ) யஷ்வந்த் (வ/30) கொருக்குப்பேட்டை 2) பிரபாகரன் (எ) அன்னக்கூடை பிரபாகரன் (வ/29) கொடுங்கையூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (25.03.2022) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் மதுரவாயல் தனலட்சுமி நகர், 3வது தெரு, ஏரிக்கரை கரையோரம் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி சென்ற நபரை விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த ஜெய்தீப் (வ/36) ஐயப்பன்தாங்கல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.