சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜானி செல்லப்பா தலைமையில், தலைமைக் காவலர்கள் சீத்தாராமன், (த.கா.28073), ராஜசேகர் (த.கா.19470), முதல்நிலைக் காவலர் என்.பாக்கியராஜ் (மு.நி.கா.36850), காவலர் அருள் (கா.51135) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ரிச்சர்டு டேவிட் (HG 5604) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 07.04.2022 அன்று அதிகாலை ஓட்டேரி, குட்பெட் பள்ளம் முதல் தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 கார்களில் வந்த 4 நபர்களிடம் விசாரணை செய்து கார்களை சோதனை செய்த போது காரில் பெருமளவு குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் காரில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 1) ஹரிராம் (வ/32) ஓட்டேரி 2) ஹரிஹரன் (வ/22) ஓட்டேரி 3) தங்கராஜ் (வ/63) அம்பத்தூர் 4) மாரிமுத்து (வ/22) கள்ளிக்குப்பம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 518 கிலோ ஹான்ஸ், எம்.டி.எம், கூலிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 2 கார்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குட்கா கடத்தி வந்த 4 நபர்களை கைது செய்து, 518 கிலோ குட்கா, 2 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஓட்டேரி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (09.04.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.