சென்னை: மெரினா இராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த 6 நபர்கள் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் குழுவினரால் கைது. 6 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை. Adyar Traffic Investigation Wing arrested 6 persons for involving in bike stunt. Six two wheelers were recovered. Greater Chennai Police has warned that stern action will be taken against those involved in bike racing. சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையம், பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுதல் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், முக்கிய இடங்களில் காவல் குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 19.03.2022 அன்று நள்ளிரவு மெரினா இராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞர்கள் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனத்தை சாலையில் இயக்கியது தெரியவந்தது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.முகேஷ் (வ/20), திரு.வி.க நகர் 2.ரோமன்அல்கிரேட் (வ/23), திரு.வி.க நகர், 3.ஹரிகரன் (வ/21), புரசைவாக்கம், 4.முகமது சாதிக், (வ/20), கொருக்குப்பேட்டை 5.முகமது ரகமத்துல்லா (வ/20), கொருக்குப்பேட்டை 6.முகமது ஆசிப் (வ/19),கொருக்குப்பேட்டை ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
மேலும் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 1 கே.டி.எம், 4 யமஹா, 1 ஆக்டிவா என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களி பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களை மாற்றியமைப்பதும் (Modify) சட்ட விரோதமானது ஆகும். எனவே இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் (Mechanic) அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் ஆகும், இவ்வாறு இளஞ்சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், இளஞ்சிறார்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் காயங்கள் உண்டாகி, அசாம்பவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள், 18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.