சென்னை : கடந்த 10.04.2022 அன்று விடியற்காலை சுமார் 05.15 மணியளவில், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அவ்வழியே நடைபயிற்சி சென்ற நபர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு கொடுத்த தகவலின்பேரில், மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இறந்த நபர் திருவல்லிக்கேணி, வெங்கடாச்சல நாயக்கர் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன், (வ/50) என்பதும், உறங்கி கொண்டிருந்த பச்சையப்பனை 2 நபர்கள் கம்பியால் தாக்கியும், அருகிலிருந்த கல்லில் தலையை மோதியும் இரத்தக்காயங்கள் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மெரினா காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இறந்த நபரின் வீட்டினருகில் விசாரணை செய்து, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமீல் அகமது, (வ/32), .சுஜி, (வ/38), சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில், குற்றவாளி சமீல் அகமது என்பவர் கடந்த 09.04.2022 அன்று இரவு பச்சையப்பன் வீட்டினருகே மது அருந்தி கொண்டிருந்தபோது , பச்சையப்பன் சமீல் அகமதுவை ஏன் இங்கு மது அருந்துகிறாய் எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதும், இதனால் ஆத்திரமடைந்த சமீல் அகமது அவருக்கு தெரிந்த சுஜி என்பவருடன் சேர்ந்து, சம்பவ இடத்தில் உறங்கி கொண்டிருந்த பச்சையப்பனை தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.
மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.