சென்னை: மயிலாப்பூர் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் நன்னடத்தை பிணையில் இருந்து வந்த ஜோசப் (எ) மின்னல் ஜோசப் என்பவர் அந்த பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால், கோட்டூர்புரம் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். Kotturpuram Police remanded Joseph @ Minnal Joseph to judicial custody on the orders of Deputy Commissioner of Police, Mylapore, for having violated the bond conditions of the security proceedings initiated against him.சென்னை, கோட்டூர் பகுதியில் வசிக்கும் ஜோசப் (எ) மின்னல் ஜோசப் (வ/49) என்பவர் கோட்டூர்புரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.
இவர் மீது 1 கொலை வழக்கு உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், ஜோசப் (எ) மின்னல் ஜோசப் கடந்த 12.10.2021 அன்று மயிலாப்பூர் துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், ஜோசப் (எ) மின்னல் ஜோசப் கடந்த 03.03.2022 அன்று கந்தன் (எ) சம்பத்குமார் என்பவரை கையால் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
எதிரி ஜோசப் (எ) மின்னல் ஜோசப் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணை ஆணையாளர், திருமதி.திஷா மிட்டல்., இ.கா.ப அவர்கள், மேற்படி எதிரி ஜோசப் (எ) மின்னல் ஜோசப் என்பவருக்கு, கு.வி.மு.ச. பிரிவு 110 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 223 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.