சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியான தலைமைக் காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 3 குற்றவாளிகள் கைது. முக்கிய குற்றவாளியை பிடிக்க உதவிய ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் 4வது காவல் ஆணைய தலைவர் அவர்கள், அவரது பாதுகாப்பு அதிகாரியான தலைமைக் காவலர் சக்திவேல் (வ/52) என்பவருடன் 22.03.2022 அன்று காலை 10.50 மணியளவில் காரில் அசோக்நகர் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள், முன்னாள் நீதிபதி அவர்களின் காரை முந்திச்சென்று வழிமறித்து நின்றுள்ளனர்.
உடனே தலைமைக்காவலர் சக்திவேல் இருசக்கர வாகனத்தை எடுக்கும் படி அவர்களிடம் கூறியபோது, அந்த நபர்கள் சக்திவேலிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, சக்திவேலை கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இரத்த காயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிசிச்சை பெற்ற நிலையில் இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும், குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், அன்றைய தினம் மாலை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ரோந்து வாகன காவல் பொறுப்பு அதிகாரி/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.லோஹிதாசன் மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ஆயுதப்படை காவலர் ரெதிஷ் (கா.56792) ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒரு ஆட்டோ மீது மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டு காவல் குழுவினர் ஓடிச் சென்று இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், அவரை சோதனை செய்தபோது, அவர் 2 கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு வந்த தலைமைக் காவலர் அன்சாரி (த.கா.36051) என்பவர் பிடிபட்ட நபர் பழைய குற்றவாளி எனவும், காலை அசோக்நகர் பகுதியில் தலைமைக் காவலரை கத்தியால் தாக்கிய குற்றவாளி என்றும் சிசிடிவி பதிவுகளை பிடிபட்ட நபருடன் ஒப்பிட்டு தெரிவித்ததையடுத்து, காவல் குழுவினர் அந்த நபரிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்து, பிடிபட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட நபர் புருஷோத்தமன் (வ/27) ஆதம்பாக்கம் என்பதும், இவர் மீது ஜெ.ஜெ.நகர், கொரட்டூர், திருமங்கலம் காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதும், புருஷோத்தமன் அன்றைய தினம் காலை அவரது 2 நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் அசோக்நகர் பகுதியில் சென்றபோது, காரில் சென்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியான தலைமைக் காவலர் சக்திவேலை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில் பிடிபட்ட புருஷோத்தமனை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், விசாரணைக்குப் பின்னர் எதிரி புருஷோத்தமன் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நிஷாந்த் (வ/26) கொரட்டூர் மற்றும் மனோஜ் (வ/22) திருச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். சிறப்பாக பணிபுரிந்த ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (28.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.