சென்னை: சென்னை எழும்பூரில் 04.04.2018 அன்று மாலை 4.30 மணி அளவில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது. இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பணியின்போது காவல்துறையினருக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது என கூறினார்.
இந்த விழாவில் சிறந்த காவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட-29 (ஆண்கள் 17 மற்றும் பெண்கள் 12) துணை கண்காணிப்பாளர்களின் ஓராண்டுகால பயிற்சி நிறைவுவிழா மற்றும் 2017ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் சீருடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 201 பதக்கங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, குடிமைப்பணி மற்றும் ஊர்காவல் படையினைச் சார்ந்த சீருடை பணியாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
201 பதக்கங்களில் 159 பதக்கங்கள் காவல்துறையினருக்கும், 17 பதக்கங்கள் சிறைத்துறையினருக்கும், 16 பதக்கங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கும் மற்றும் 09 பதக்கங்கள் ஊர்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டன.
பயிற்சி முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் பேசிய அவர் தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று பாராட்டினார். காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளதாகவும் கூறினார்.
இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர்அதிகாரிகளும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.