தமிழக காவல்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல் சிறார் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை பெருநகர காவல் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24.12.2011ம் தேதியிலிருந்து காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் சிறார் மன்றம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
தற்போது இம்மன்றத்தில் 53 சிறுவர்களும்¸ 67 சிறுமிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு காவல் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள்¸ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணை மூலமாக 24.04.2018ம் தேதியிலிருந்து கோடைகால பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.
சிறுவர்களுக்கு கபடி¸ கால்பந்து¸ இறகுப்பந்து¸ சதுரங்கம்¸ கேரம்¸ கூடைபந்து¸ தடகளம்¸ குத்துச்சண்டை¸ கிரிக்கெட் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் பெண்களுக்கு டிரைவிங் பயிற்சி வகுப்புகள்¸ ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சிகள்¸ கணினி பயிற்சி வகுப்புகள் மற்றும் கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
கண்ணகி நகர் பகுதியானது மீள்குடியமர்த்தப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் பகுதியாகும். மேலும் இப்பகுதியில் குற்ற சரித்திரம் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள நபர்கள் அதிகளவில் உள்ளதாலும்¸ இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களாக இருப்பதாலும்¸ அப்பகுதியில் உள்ள குழந்தைகளை நன்னெறிபடுத்தும் விதமாக கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டு குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கப்படுகிறது.