சென்னை: காவல்துறை மற்றும் நீதிதுறைக்கு எதிராக அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, காவல்துறையினர், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார்.
இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188, 290, 294 பி, 353, 153 ஏ,. 505 (1), 506 (1) ஆகிய 8 பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே எச் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் துணைத் தலைவர் சுதா புகார் கொடுத்துள்ளார்.
டிஜிபி அலுவலகத்தில் அவர் கொடுத்துள்ள புகாரில், திருமயத்தில் எச். ராஜா காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஊர்வலம் நடத்துவோம், நடுத் தெருவில் மேடை அமைப்போம், தடையை மீறுவோம் என்று மிரட்டிப் பேசியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவரை காவல்துறையினர் இன்று கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தவகல்கள் கூறுகின்றன.