தமிழக காவல் துறையில் யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகும் ஐபிஎஸ் அதிகாரிகளும், குரூப் தேர்வுகள் மூலம் தேர்வாகும் டிபிஎஸ் (TPS) எனும் அதிகாரிகளும் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இடங்கள் டிபிஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்படுவதாக, மாநகர போக்குவரத்து ஊழல் கண்காணிப்பு டிஜிபி ஜாங்கிட் தமிழக தலைமை செயலாளருக்கு மார்ச் மாத இறுதியில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், டிஜிபி ராஜேந்திரனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விதிமுறைகள் 8, 9 பிரிவுகளின்படி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வித முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாகவும், 36 டிபிஎஸ் அதிகாரிகள் அந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கூட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் கூட்டி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தமது கடிதத்தில் ஜாங்கிட் குறிப்பிட்டுள்ளார்.