சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலருக்கு தமிழக அரசு காந்தியடிகள் காவலர் விருது அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கண்ணன், சேலம் மண்டலம் மத்திய புலனாய்வுப்பிரிவு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையம் தலைமை காவலர் கோ.நாராயணன், விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் ஜோசப், சென்னை பழவந்தாங்கல் காவல் நிலைய முதல் நிலை காவலர் நாராயணன் ஆகியோர் கள்ளச்சாரய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுகிறது.விருதுகள் பெறும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த விருது வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும். இவ்விருதுடன், ஒவ்வொருவருக்கும் ₹40 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.