புதுடில்லி: ‘காவல் துறையில், அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அனைத்து மாநிலங்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.’காவல் துறையில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் தான், நாட்டில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படுகிறது; நாடு முழுவதும், காலியாக உள்ள, 5.42 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதை அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் உணர வேண்டும்.
நாடு முழுவதும், காவல் துறையில், அனைத்து நிலைகளிலும், பதவி வாரியாக காலியாக உள்ள இடங்கள் குறித்த விபரங்களை, மாநில உள்துறை செயலர்கள், நான்கு வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இது குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் கடிதம் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கையை தாக்கல் செய்யாத மாநிலங்களின் உள்துறை செயலர்கள், அனைத்து ஆவணங்களுடன், அடுத்த விசாரணையின் போது, நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளது
நமது.செய்தியாளர்
குடந்தை .ப.சரவணன்