சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணியாளர்கள், 1,686 பேருக்கு, ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், காவல், தீயணைப்பு, சிறைத்துறை பணியாளர்கள், தம் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று, முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில், காவலர் மற்றும் தலைமை காவலர் நிலைகளில், 1,500 பேருக்கு பதக்கங்கள் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தீயணைப்பு துறையில், முன்னணி தீயணைப்போர், டிரைவர், தீயணைப்போர் நிலைகளில் உள்ள, 120 பேருக்கும்; சிறை துறையில், முதல்நிலை ஆண் வார்டன்கள், 60 பேருக்கும், சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பதக்கங்கள் பெறுவோருக்கு, மாதாந்திர பதக்கப்படி, அவர்களின் நிலைகளுக்கேற்ப, 2018 பிப்., 1 முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும், காவல் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர், சிறை துறை தலைவர் ஆகியோரால், மாவட்ட தலைநகரங்களில், பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில், பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், காவல் புகைப்படக் கலைஞர்கள் என, ஒவ்வொரு பிரிவிலும் இருவர் என, ஆறு அதிகாரிகளுக்கு, தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும்.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக, காவலர் மற்றும் தலைமை காவலர் நிலையில், 4,000 ரூபாய்; சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில், 6,000 ரூபாய்; டி.எஸ்.பி., நிலையில், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.