சென்னை: காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழக அரசு காவலர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர்களின் பணிகளில் குறுக்கீடு செய்வதில்லை. அதனால்தான் இன்று தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நேற்று நமது காவல்துறை எல்லா காலங்களிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் பொது ஒழுங்கை சிறப்பாக பேணி பாதுகாக்கும் துறையாக விளங்கி வருகின்றது.ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவ வேண்டும்.
இந்த நிலையினைத்தான் நமது காவல் துறையினர் சிறப்பாக செய்து தமிழ்நாட்டை ஒரு அமைதி பூங்காவாக திகழச் செய்கின்றனர்.காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே இந்த காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டம்.
இந்த திட்டம் பெங்களூரில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹநிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால் தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகும்.
இந்தியாவிலேயே ராணுவத்திலோ அல்லது துணை ராணுவத்திலோ கூட இம்மாதிரியான பயிற்சி இதுவரை அளிக்கப்படவில்லை. அனைத்து மாவட்டம் மற்றும் காவல் பிரிவுகளிலும், சிறப்பு பிரிவுகளிலும் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கென காவல் துறையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் 2 வருடம் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
அதிக அளவு மன அழுத்தம் உள்ளோருக்கு, தனியாக நிறை வாழ்வு பயிற்சி அளிக்கப்படும். அனைத்து முதன்மை பயிற்சியாளர்களுக்கும் ஆற்றுப்படுத்துதலில் ஒரு பட்டய சான்றிதழ் வழங்கப்படும். அமைதியையும் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் காவலர்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த நிறைவாழ்வு பயிற்சியை நடத்துவதற்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.10 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த பயிற்சியானது தமிழ்நாடு காவல் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் சுமார் 1,20,000 காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள சுமார் 3,60,000 குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு காவலர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
அவர்களின் பணிகளில் குறுக்கீடு செய்வதில்லை. இன்று தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான், தமிழக காவல் துறையானது, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு உலக மற்றும் தேசிய அளவில் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்ஜன் மார்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.