தேனி: தேனி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து காவலர் நலச்சங்கம் தொடங்கியுள்ளனர். சங்கத்தின் ஆலோசகராக ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் அவர்கள் தேர்ந் தெடுக்க ப்பட்டுள்ளார். தலைவராக நல்லமுத்து, துணைத் தலைவராக தனுஷ்கோடி, செயலாளராக கோவிந்தராஜ் மற்றும் பொருளாளராக இரத்தினசபாபதி ஆகியோர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிதாக சங்கம் தொடங்கி உள்ள நிலையில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்கள் காவலர் நல சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் ஆலோசகர் ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் கூறுகையில்; இந்த சங்கம் 23/22 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இந்த சங்கம் ஓய்வு பெற்ற காவலர்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற காவலர்களின் குழந்தைகளின் கல்வி, போட்டித்தேர்வு மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டியாக திகழ்வதோடு பணியில் உள்ள காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவைப்படும் கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியாக செயல்பட உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் உட்கோட்டங்களுக்கும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் தலா 4 பேர்களை நியமித்து, அந்தந்த உட்கோட்டங்களுக்குள் உள்ள காவலர்களுக்கு தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்ய ஏற்பாடு செய்யப் போவதாகவும் தெரிவித்தார். பேட்டியின்போது சங்க உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.