சென்னை: அடுத்தடுத்து தமிழகத்தில் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள காவலர் தற்கொலைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் மன உளைச்சலுக்கு ஆளான காவல்துறையினர் என பல செய்திகள் நம் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
காவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும் என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழக காவல்துறையில் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான 9 மாத காலத்தில் மொத்தம் 152 பேர் இறந்துள்ளனர். இதில் 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; மாரடைப்பில் 31 பேரும், சாலை விபத்தில் 56 பேரும், உடல் நலக்குறைவால் 17 பேரும், புற்றுநோய்க்கு 8 பேரும், மஞ்சள்காமாலை நோயால் 6 பேரும், சிறுநீரகம் செயலிழந்ததால் 3 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், கல்லீரல் பாதிப்பு மற்றும் இதய கோளாறு, மூளைக்காய்ச்சலில் தலா ஒருவரும் உயிரிழந்துள்னர். 9 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் பலர் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர். அதையும் மீறி பதிவு செய்தாலும் குடும்ப பிரச்னை என்றே முடித்து விடுகின்றனர். கடந்த 1 வாரத்திற்கு முன்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலர், தன் மனைவியை பார்க்க விடுப்பு கேட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்க மறுத்ததால் வேலையே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு போய் விட்டார்.
இது ஒன்றும் புதியது அல்ல. 2002ல் திருவாரூர் மாவட்டத்தில் சொக்கலிங்கம் என்ற காவலர் ரவீந்திரன் எஸ்ஐ என்பவரிடம் விடுப்பு கேட்கிறார். அவர் விடுப்பு கொடுக்க மறுத்தது மட்டுமின்றி இரவு பணிக்கு அனுப்பி விடுகிறார். இதனால், ஆத்திரமடைந்த காவலர் சொக்கலிங்கம் பணி முடிந்து வந்த பிறகு ரவீந்திரன் எஸ்ஐயை சுட்டு கொல்ல தேடுகிறார். ஆனால், சொக்கலிங்கத்தை பாஸ்கரன் எஸ்ஐ தடுக்கிறார். இதனால், அவரை சுட்டு கொன்று விட்டு, சொக்கலிங்கம் தானும் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அது முதல், இதுவரை மரணங்கள் நிறுத்தப்படாமல் நடைபெறுவதற்கு முக்கிய காரணம். தங்களது குறைகளை சொல்ல அமைப்பு இல்லாதது தான் என்ற வாதம் இன்றும் நீடிக்கிறது.
தமிழகத்தில் மொத்த போலீசில் 25 சதவீதம் பேர் ஆர்டர்லியாக தான் இருக்கின்றனர். போலீஸ் உயர் அதிகாரி வீடுகளில் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஆர்டர்லியாக பணிபுரிகின்றனர்.
கடந்த 1978ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பாப்பா உமா நாத் என்ற எம்எல்ஏ ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், ஆர்டர்லி முறை இருப்பதாக கூறுவதை எம்ஜிஆர் மறுக்கிறார். ஆர்டர்லி முறை இருப்பதை பாப்பா உமாநாத் நிரூபிக்கிறார். இதை தொடர்ந்து எம்ஜிஆர் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதாக சட்டம் இயற்றினார்.சட்டப்படி தமிழகத்தில் ஆர்டர்லி முறையில் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மறைமுகமாக 100க்கு 25% பேர் ஆர்டர்லியாக தான் இருக்கின்றனர். ஆர்டர்லி முறை ஒழிந்தாலே மரணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் கேரளா, டெல்லி, பீகார், ஓடிசா உட்பட 8 மாநிலத்தில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் காவலர்களுக்கு சங்கம் இல்லை. காவலர்களை திட்டுவதையோ, அடிப்பதையோ கேட்பதற்கு யாரும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்களிடம் கேட்டால் தெரியும். அவர்கள், கேரளா போலீசார் ரொம்ப மரியாதையுடன் நடத்துவார்கள் என்று கூறுவார்கள். காரணம் அவர்களுக்கு 8 மணி நேரம் வேலை. காலையில் சென்றால் மாலையில் வீட்டிற்கு சென்று விடலாம். ஆனால், தமிழக காவல்துறையில் பணிபுரிபவர்கள் வீட்டை விட்டு வந்தால் அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்று கூட சொல்ல முடியாது.காவலர்களை கடுமையாக வேலை வாங்குவதால், அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி குறைந்த வயதிலேயே உயிரிழக்கின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து
நமது நிருபர்
ம.சசி