சென்னை: பெரவள்ளூர் பகுதியில் நள்ளிரவு வீடு தெரியாமல் சுமார் 2 ½ மணி நேரம் தவித்த 80 வயது மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி அவரது மகன்களிடம் ஒப்படைத்த பெரவள்ளூர் காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். பெரவள்ளூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் (த.கா.44286) என்பவர் கடந்த 25.3.2022 அன்று இரவு காவல் நிலைய பாரா அலுவல் பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் (26.03.2022 அதிகாலை) வெளியில் வயதான மூதாட்டி ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததை கண்டு.
தலைமைக் காவலர் சுரேஷ் மூதாட்டியை அழைத்து விசாரித்தபோது, தனது பெயர் பத்மாவதி (வயது-80) என்றும் இப்பகுதியில் உள்ள வீட்டில் மகனுடன் வசித்து வருவதாகவும், சுமார் 11.00 மணியளவில் காற்று வாங்குவதற்காக வீட்டிலிருந்து சற்று தொலைவு சென்றதாகவும் பின்னர் வீடு தெரியாமல் சுமார் 2 ½ மணி நேரம் அலைவதாகவும் தெரிவித்தார். உடனே சுரேஷ், மூதாட்டி பத்மாவதிக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, இரவு பணியிலிருந்த ரோந்து வாகன பொறுப்பு அதிகாரி/தலைமைக் காவலர் ராஜ்குமார் (த.கா.19868) என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து, அங்கு வந்த தலைமைக் காவலர் ராஜ்குமார் மூதாட்டியை அவரது செல்போனில் படம் பிடித்துக் கொண்டு, ரோந்து வாகனத்தில் சென்று அரை மணி நேரத்தில் GKM காலனி அருகே சைக்கிளில் சென்ற நபரை நிறுத்தி செல்போனில் இருந்த மூதாட்டியின் படத்தை காண்பித்தபோது, அந்த நபர் கண்ணீர் மல்க தனது பெயர் உதயகுமார் என்றும், படத்திலுள்ள பெண்மணி எனது தாயார் பத்மாவதி என்றும்.
இவரை தேடிக் கொண்டு சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். உடனே, உதயகுமார், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெரவள்ளூர் காவல் நிலையம் வந்தததின்பேரில், அவர்களிடம் மூதாட்டி பத்மாவதி ஒப்படைக்கப்பட்டார். பின்னர் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் தக்க சமயத்தில் உதவிபுரிந்த காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். நள்ளிரவு வீடு தெரியாமல் சுமார் 2 ½ மணி நேரம் தவித்த 80 வயது மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி அவரது மகன்களிடம் ஒப்படைத்த பெரவள்ளூர் காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (28.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.