சென்னை: திருமங்கலம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2,99,100/- அடங்கிய பையை நேர்மையாக போலீசில் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய மணிவண்ணன் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Commissioner of Police appreciated and rewarded Manivannan who found cash of Rs.2,99,100/-, lying unattended on the road and to handed over to the person who had missed the cash. சென்னை, கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் (வ/46) என்பவர் கடந்த 17.03.2022 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு, Be Well மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் அதிகளவு பணம் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே மணிவண்ணன் அவசர அழைப்பு எண் 100ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் பேரில், திருமங்கலம் சுற்றுக்காவல் ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று மணிவண்ணனிடம் விசாரணை செய்து, பையிலிருந்த பணத்தை சரிபார்த்த போது, அதில் ரூ.2,99,100/- இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் பணத்தை தவறவிட்ட சந்தோஷ் (வ/25) பட்டாளம் என்பவர் தவறவிட்ட பையை தேடி சம்பவயிடத்திற்கு வந்துள்ளார். போலீசார் மேற்படி சந்தோஷிடம் உரிய விசாரணை செய்ததில், சந்தோஷ் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருவதும், வசூல் செய்த பணத்தை பார் ஒப்பந்ததாரர் செந்தில் என்பவரிடம் ஒப்படைக்க எடுத்து சென்ற போது, இருசக்கர வாகனத்திலிருந்த பணப்பை தவறி சாலையில் விழுந்துள்ளது தெரியவந்தது. மேலும் சந்தோஷ் கூறிய அடையாளங்களை வைத்து மேற்படி பணம் சந்தோஷ் வேலை செய்யும் பார் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன் பேரில் செந்திலை நேரில் வரவழைத்து ரூ.2,99,100/- போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். திருமங்கலம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2,99,100/-ஐ அடங்கிய பையை போலீசாரிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய திரு.S.மணிவண்ணன் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (23.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.