காலாட்படையை நவீனப்படுத்துவதற்கான மிகப் பெரிய கொள்முதல் திட்டங்களில் ஒன்றை ராணுவம் இறுதி செய்துள்ளது. இதன்படி ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “7 லட்சம் ரைபில்கள், 44,000 குறைந்த எடையிலான இயந்திர துப்பாக்கிகள் (எல்எம்ஜி), சுமார் 44,600 கார்பைன் துப்பாக்கிகள் வாங்குவதற்கான விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. கொள்முதலுக்கான தகவல் கோரிக்கை இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது” என்று தெரிவித்தன.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் விளங்குகிறது. எனினும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்திய எல்லையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு ஆயுதக் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆயுதக் கொள்முதல் நடைமுறைகளை தொடங்கியிருப்பதுடன் பல்வேறு சிறிய ரக ஆயுதங்கள், குறிப்பாக குறைந்த எடையிலான இயந்திரத் துப்பாக்கிகள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை (டிஆர்டிஓ) கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய 7.62 மி.மீ. அஸ்ஸால்ட் ரைபில்களுக்கான வரையறைகளையும் ராணுவம் இறுதி செய்துள்ளது. மிகவும் அவசியமான இந்த வகை துப்பாக்கிகள் கொள்முதலுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. – பிடிஐ