கடலூர்: கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 24 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும், அனாதையாக, பிச்சை எடுத்து சுற்றித்திரியும் குழந்தைகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் மற்றும் வறுமையில் வசிக்கும் பெற்றோர் சம்மதத்துடன் அவர்களுக்கு போதிய கல்வி அறிவு வழங்கவும் ஆபரேஷன் முஸ்கான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான திட்டத்தை(ஆபரேஷன் முஸ்கான்) செயல்படுத்த கடலூர், சிதம்பரம் உள்பட 7 உட்கோட்டங்களிலும் தலா ஒரு உதவி- ஆய்வாளர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:–
இது ஒரு நல்ல சேவை, இந்த சேவை மூலம் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போன 18 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கும் உதவி செய்த திருப்தி கிடைக்கும். அனாதையாக, பிச்சை எடுத்துக்கொண்டு சுற்றித்திரியும் குழந்தைகளையும், அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்ய முடியும்.
அவர்கள் படிக்க விரும்பினால் அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினால் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த குழந்தைகளை மீட்டு சைல்டு லைன் மூலம் காப்பகத்தில் ஒப்படைத்து படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறினார்.
இந்த குழு வருகிற 31–ந்தேதி வரை செயல்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் காணாமல் போன 20 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.