காஞ்சிபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் வீரமரணமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களிலும், பணியின்போதும் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபி முன்பு காவலர் வீர வணக்கநாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதை யொட்டி காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் டி.ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி மற்றும் காவல்துறையினர் காவலர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்கள்.
வீரவணக்க நாளையொட்டி கடந்த வாரத்தில் மினி மாரத்தான், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு காவலர்களின் தியாகங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகே உள்ள நினைவு ஸ்தூபியில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையிலான காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜேஷ் கண்ணன், ஆய்வாளர் விநாயகம் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
ஊனமாஞ்சேரி:
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு 48-குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் காவல்துறை கூடுதல் இயக்குனர் ஜாபர்சேட் கலந்து கொண்டார்.