கோவை : கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகரில், நேற்று முன்தினம் இரவு பீளமேடு காவல் துறையினர், ரோந்து சென்றனர். வழியில் சந்தேகத்துக்கு இடமான வகையில், சுற்றிய ஜெயப்பிரகாஷ், சந்துரு ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, இருவரும் கஞ்சா வாங்க வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கஞ்சா விற்கும் வீட்டையும் அடையாளம் காண்பித்தனர். அந்த வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கோகுல், (21), என்பவர் வசித்துவந்தார்.
தனியார் கல்லுாரியில் பி.ஏ., சமூகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் கோகுல், கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து கோவையில் மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அவரது கையிருப்பில் இருந்த, 970 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோகுலை ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் காவல் துறையினர் , உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மாணவர் கோகுல் வாட்ஸ் ஆப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்துவந்த நிலையில், குழுவில் இருந்த 60 பேரிடம் விசாரிக்க காவல் துறையினர் , முடிவு செய்துள்ளனர். யோகேஷ் என்ற மாணவனையும் தேடி வருகின்றனர்.