தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மறைந்தார் . முன்னதாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக , காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்தே தமிழகம் முழுவதும் பரபரப்பும்,பதட்டமும் ஏற்பட்டது, இதன்காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் மிக மிக கவனமாக பலவித பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை முன் ஏற்பாடாக செய்திருந்தது.
அதற்கு முன்னரே ஜூலை 27-ம் தேதியிலிருந்து அவர் மரணமடையும் ஆக.7-ம் தேதி வரை இரவு பகல் பாராது கண் உறக்கமின்றி காவேரி மருத்துவமனையில் காவல் காத்தது காவல்துறை . விஐபிக்கள் தினமும் மருத்துவமனைக்கு வருவதும், தொண்டர்கள் கூட்டமும், வாகன நெரிசலும் காவல்துறைக்கு சவாலான விஷயமாக இருந்தது.
கருணாநிதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட 7-ம் தேதி மாலையிலிருந்து மறுநாள் அடக்கம் நடந்த 8-ம் தேதி இரவு 7-30 மணி வரை சென்னையில் சம்பாவிதம் நிகழாமல் பார்த்துக்கொண்டது சென்னை காவல்துறை.
மரண செய்தி வெளியானதும், காவல்துறை இன்னும் பல மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்படத் தொடங்கியது. கருணாநிதியின் உடல் அடக்கம் மறுப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது.
8-ம் தேதி அதிகாலை முதல், இறுதி மரியாதை நிகழ்வு சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்றது. தேசிய அளவிலான மிக மிக முக்கிய பிரமுகர்கள் (விவிஐபி) பலரும், ராஜாஜி ஹாலுக்கு வருகை தரத்துவங்கினர்,
முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஒழுங்கு படுத்தும் வகையில், விவிஐபி மற்றும் பொது மக்களுக்கு தனிபாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கட்டுக்குள்அடங்காத பெரும் கூட்டம் ராஜாஜி ஹாலை சுற்றிலும் திரண்டதால் , காவல்துறையின் பணி மேலும் பல மடங்கு அதிகரித்தது.
ஒருகட்டத்தில் பொதுமக்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த வழியே அஞ்சலி செலுத்த நின்று கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் பலரும், பொதுமக்கள் வரிசையிலிருந்து, விலகி வெளியேறி முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிக்குள் நுழைந்தனர்.
இதன் காரணமாக, முக்கிய பிரமுகர்கள் பலரும், கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவானது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் கும்பல் கும்பலாக திமுகவின் நுழைந்ததை பார்த்ததும், பொதுமக்கள் சிலரும் அதே போல நுழைந்தனர்.
காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனளிக்க வில்லை. இதன் காரணமாக லேசான லத்தி சாரஜ் செய்ய நேரிட்டது.
கும்பல் கும்பலாக ராஜாஜி அரங்கில் நுழைந்த திமுகவினர்,ஆர்வமிகுதி காரணமாக,கருணாநிதி் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை மீது திமுதிமு வென விழத் தொடங்கினர்.
ஆயிரக்கணக்கான திமுவினர் தடுப்புகளை மீறி திடுதிப்பென இப்படி வந்ததால் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் சிக்கி திணறத் துவங்கினர்.
மு.கஸ்டாலின் தொண்டர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தொண்டர்களை கட்டுபடுத்த முடியவில்லை. அதிவிரைவு படை, துணைராணுவம் வந்தும் கூட , கூட்டம் அடங்க வில்லை.
இதனால், கருணாநிதி் உடல் வைக்கப்பட்டிருந்த, கண்ணாடிபெட்டியை சுற்றிலும் பாதுகாப்பு வளையம்போல காவலர்கள் நிறுத்தப்பட்டனர், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ,சவப்பெட்டி அருகிலேயே சுமார், இரண்டு மணி நேரம் நின்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்
காவல்துறை மட்டும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை செய்யாமல், இருந்திருந்தால், கலைஞரின் சவ உடல் வைக்கப்பட்டிருந்த, .கண்ணாடி பெட்டி சேதம் அடைந்து, பலவித அசவுகரியங்கள்— விரும்பகாத சம்பவங்கள் நடந்திருக்கும்.
அத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி காவல்துறை சிறப்பாகவே செயல்பட்டது.
ராகுல் காந்தி விவகாரம் :
கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்த காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாவல் தரப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
ராகுல் காந்தியின் பயண திட்டங்கள் குறித்து எந்தவிதமான விபரமும் முறைப்படி, அந் கட்சியினரால், காவல்துறைக்கு தெரியப்படு்த்தப்படவில்லை, ராகுல் காந்தி ஹோட்டலிலிருந்து கிளம்பும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பே கிளம்பி வந்ததும் போலீஸாருக்கு சிக்கலாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஒரு சில நிமிடங்கள் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. அப்படி இருந்தும் உடனடியாக சுதாரித்து கொண்டு தகுந்த பாதுகாப்பை ராகுலுக்கு போலிசார் வழங்கினர் என்பதுதான் உண்மையாகும்.
இப்படியிருக்க 10 நாட்களுக்கும் மேலாக கடுமையாக பாதுகாவல் பணியில் இருந்த போலீஸாரை அரைமணி நேர சம்பவத்தை வைத்து( அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும்) எகிறுவது என்ன நியாயம்.