கடலூர்: நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் தெர்மல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து ஒரு கும்பல் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது. இதுபோன்று கடந்த 6 மாதங்களில் மட்டும் 16 பேரிடம் அந்த கும்பல் நகைகளை பறித்துள்ளது.
இதனால் நெய்வேலி நகர மக்கள் பீதி அடைந்தனர். தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச்செல்லும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று நெய்வேலி நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் களத்தில் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக நகை பறிப்பு கும்பலை பிடிக்க நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், டவுன்ஷிப் ஆய்வாளர் ரவீந்திரராஜ், தெர்மல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர், நெய்வேலி நகரில் நகைகளை பறிகொடுத்தவர்களிடம் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த கும்பலை பற்றி தீவிரமாக விசாரித்தனர்.
இந்த நிலையில் நெய்வேலி 11-வது வட்டத்தை சேர்ந்த சந்திரன் மகள் ரேணுகா என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள், ரேணுகாவிடம் முகவரி கேட்பதுபோல் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேணுகாவின் கழுத்தில் வைத்தார். மேலும் கூச்சலிட்டால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதற்கிடையில் மற்றொருவர், ரேணுகா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதையடுத்து ரேணுகா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உடனே அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இந்த சம்பவம் பற்றி உடனடியாக நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நகரம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். நெய்வேலி நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 3 தனிப்படை காவல்துறையினர் 12-வது வட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்தனர். ஆனால் அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே காவல்துறையினர் தங்களது வாகனங்களை எடுத்துக்கொண்டு, அவர்களை துரத்திச்சென்று பிடித்தனர்.
இதனை தொடர்ந்து 2 பேரையும் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தெற்கு வசனாங்குப்பத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் கலியமூர்த்தி (25), மதனகோபாலபுரம் அப்பியம்பேட்டையை சேர்ந்த ராஜகுணசேகர் மகன் அன்பரசன் (35) ஆகியோர் என்பதும், ரேணுகாவின் நகையை பறித்து வந்ததும், நெய்வேலியில் நடந்த பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் தனி அறையில் வைத்து 2 பேரிடமும் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து நெய்வேலி நகரில் கடந்த 6 மாதத்தில் 16 பேரிடம் நகைகளை பறித்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சத்திரம்பழையூர் சிவனந்தபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி (36), பேய்க்காநத்தத்தை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான கொள்ளையர்களிடம் இருந்து மொத்தம் 81 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.