கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கடைகளே இயங்கி வருகிறது. இதையடுத்து சிலர் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் மேற்பார்வையில் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செபாஸ்டின் மற்றும் கடலூர் முதுநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நேற்று ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த காரில் வந்த 2 பேரையும் மதுபாட்டில்களுடன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை மீனாட்சிநகரை சேர்ந்த சேகர் மகன் சுனோபா என்கிற சுந்தரசேகர் (27) தங்கராஜ்நகரை சேர்ந்த மன்னர் மகன் மணிவண்ணன் (32) ஆகியோர் என்பதும், மணிவண்ணனுக்கு சொந்தமான காரில் அவர்கள் 90 மில்லி லிட்டர் அளவு கொண்ட 300 மதுபாட்டில்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 144 மதுபாட்டில்கள் என மொத்தம் 444 மதுபாட்டில்களை கடத்தி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் கடலூர் முதுநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 444 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். மதுபாட்டில்கள், சாராய கடத்தலில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தி வரப்பட்டதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும், அதனை கடத்த பயன்படுத்திய காரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சிலர் மது கடத்தி வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
கடலூர், பண்ருட்டி பகுதிகளில் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனைச்சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சாராயம் கடத்தி வந்த பண்ருட்டி ஏ.பி.குப்பம் பழைய காலனியை சேர்ந்த அய்யனார் மகன் பாண்டு என்கிற பாண்டுரங்கன் (35) புதுக்காலனி பாலகிருஷ்ணன் மனைவி தமிழரசி என்கிற சின்னதங்கச்சி (52) ஆகிய 2 பேர் இன்று (நேற்று) தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இவர்களையும் சேர்த்து 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராய கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வருவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறினார்.