கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காவல்படையில் இருந்து காவல் பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு கடலூர் காவல் பயிற்சி பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் கடந்த மாதம் வரை காவல் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழா கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. விழாவின் தொடக்கமாக பயிற்சி பள்ளி முதல்வரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், கடந்த 6 மாதங்களாக காவல் பள்ளியில் பயிற்சி பெற்ற 126 பேரும் நாளை முதல் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் சேருகிறார்கள் என்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப், பயிற்சி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நாள் பயிற்சி காவல்துறையினரின் வாழ்க்கையில் முக்கியமான நாள், நீங்கள் 6 மாத காலம் பயிற்சி பெற்று காவல்துறைக்குள் முதல் அடியெடுத்து வைக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறீர்கள், இதேபோல் உங்கள் பணிக்காலம் முழுவதும் உடல்தகுதியை பேண வேண்டும், சீருடை அணிந்த நாம் உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே மக்கள் நம்மை மதிப்பார்கள். ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் கூட உடற்பயிற்சி கூடம் இருக்க வேண்டும். காவல்துறையை சேர்ந்த எந்த அதிகாரியும் ஒரு சிறு தவறு கூட செய்து விடக்கூடாது. நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு காவல்துறை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே சிறந்த காவல்துறை. தமிழக காவல்துறையை நவீனப்படுத்துவதிலும், ஊக்கப்படுத்துவதிலும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இவ்வாறு ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேசினார்.
முன்னதாக அவர் பயிற்சி காவல்துறையினருக்கான சட்டத்தேர்வு, கவாத்து, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். சட்டத்தேர்வில் ராஜன், வினோத் ஆகியோரும், கவாத்து பயிற்சியில் மாதவனும், துப்பாக்கி சுடுதலில் தியாகராஜனும் தங்கப்பதக்கம் பெற்றனர்.
விழாவில் பயிற்சி காவல்துறையினரின் சாகசநிகழ்ச்சிகள் நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.திருமலைசாமி, ஆய்வாளர் திரு.சரவணன், தனிப்பிரிவு உதவி- ஆய்வாளர் திரு.சிவா மற்றும் காவல் அதிகாரிகள், பயிற்சி காவல்துறையினரின் குடும்பத்தினர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.